ஆற்றாமையின் ஆறாம் தேதி..!


ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி..

இருபத்தைத்தந்து ஆண்டுகளுக்கு முன்பு
இந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை
கடப்பாரைகளுக்கு இரையானது..!

மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப்பட்டது.!
வேற்றுமையில் ஒற்றுமை
வேருடன் பிடுங்கியெறியப்பட்டது.!

கதறலும்,கடப்பாறையின் சத்தமும்
கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது!

பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த
குழந்தையின் வாயுடன் மாரும் சேர்த்து அறுக்கப்பட்டது!

பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில்
சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது!

காந்தி மகானை வீழ்த்தியவர்கள்
கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர்!

கரசேவையின் பெயரில் நரசேவை நடந்தேறியது!

இப்போது செய்யப்பட்ட அறுவடையின்
முதல் விதை விதைக்கப்பட்டதும் அன்றுதான்!

சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க
ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தாதவர்கள்
சிந்தப்பட்ட இரத்தத்தை தங்கள்
சிறுநீர் கொண்டு கழுவிய நாள்!

தட்டிக் கேட்க வேண்டியவர்கள்
எதனைக் கொண்டோ கட்டிப்போடப்பட்டனர்..!

ஒரு தலைமுறையாய் அலைகிறோம் நீதி வேண்டி!
நீதி வழங்க வேண்டியவர்கள்
பாதி பாதியாக பிரித்து வழங்கினர்
நம்பிக்கையின் அடிப்படையில்!

உண்மை எப்போதுமே தூங்காது!
அதர்மம் எப்போதுமே ஓங்காது!

இந்த நினைவை எங்கள் நெஞ்சில் சுமந்து
எம் பிஞ்சுகளுக்கு தாய்ப்பாலில் சேர்த்தூட்டுகிறோம்!

எங்களின் இந்த இயலாமையை
எங்களது பிள்ளைகள் இல்லாமல் ஆக்குவர்
எம் சமுதாயத் துயர் போக்குவர் என்ற
அசைக்க முடியா நம்பிக்கையோடு..!

 R அபுல் ஹசன்

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!