முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!


ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நேரடியாக தாக்கும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அதிகாரத் திமிரில் அரங்கேற்றம் செய்து வரும் ஆட்சியாளர்கள்..அப்படி அவர்கள் செய்யும் அராஜகங்களை பெரும்பான்மை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றார்கள்..நிதர்சனத்தில் பெரும்பான்மை மக்களை அவர்களையும் அறியாமல் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நியாயம்தான் என்ற மன மாயையில் சிக்க வைத்துவிட்டு தங்கள் செயல்திட்டங்களை மிக அழகாக நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதுதான் உண்மை ..!

ஒருபுறம் முஸ்லிம்களை மீட்டெடுக்கிறேன் பேர்வழி என்று நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் அதற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவருகின்றது இந்த சர்வாதிகார அரசாங்கம்..

முஸ்லிம்கள், தலித்களின் உணவு, வியாபார உரிமையில் நேரடியாக கை வைத்த மாட்டிறைச்சி தடை சட்டத்தை பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வந்தனர்..ஆனால் அந்த மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையை ஆத்மசுத்தியுடன் செய்தனர்..

முஸ்லிம்கள் உடனடியாக விவாகரத்து செய்யும் முறை பெண்களை பாதிப்பதாக கதறி, கண்ணீர் விட்டு அதனை தடை செய்து சட்டம் இயற்றினார்கள்..அதே நேரத்தில் இந்து திருமண சட்டப்படி விவாகரத்திற்கு ஆறு மாதம் காத்திருக்கத் தேவையில்லை, ஒரு வாரத்தில் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்கள்..

முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாம் என்று புரட்சி செய்தார்கள்..ஆனால் தேசத்தின் பெரும்பாலான கோவில்களில் பெண்கள் நுழைவிப்பு, ஆடைக் கட்டுப்பாடு போன்றவற்றை குறித்து பேச திராணியில்லாமல் துவாரங்களை அடைத்து வைத்திருக்கின்றனர்..

வீண் செலவு, தனிமனித, மத விடயங்களுக்கு அரசின் மானியம் தேவையில்லை என்று முஸ்லிம்களின் ஹஜ் பயண மானியம் ரத்து என்று அறிவித்துள்ளனர்..ஆனால் நாளொரு அறிவிப்பு, பொழுதொரு விளம்பரமாக கோவில்களுக்கு சுற்றுப்பயணம் அறிவித்து அரசே முழுசாக டூரிஸ்ட் கைடாக மாறி வருகிறது..

அரசால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்துகிறோம் என்கிறார்கள்..ஆனால் முஸ்லிம்களின் நல்வாழ்விற்காக ரங்கநாத் மிஸ்ரா, ராஜேந்திர சச்சார் ஆணையங்களின் பரிந்துரைகள் அரசாங்க அலுவலகங்களின் பரண்களில் தூசி படிந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது..

உச்ச நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்துகின்றோம்என்கிறார்கள்..இது போல உச்ச நீதிமன்றத்தின் ஓராயிரம் உத்தரவுகள் இன்னும் காற்றிலே கலந்து மூச்சை அடைத்துக் கொண்டிருக்கின்றன..

மானியக் குறைப்பு நடவடிக்கை என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.. ஆனால் ஒட்டுமொத்தமாக வழங்கப்படும் மானியத்தில் இது பூஜ்ஜியத்திற்கு மிக அருகிலான சதவிகித மானியம்..ஆனால் மொத்த மானியத்தில் முக்கால்வாசியை முழுங்குவது பெருமுதலாளிகளுக்கு வழங்கப்படும் வியாபார மானியம், பணமுதலைகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு மானியம் இவற்றில்தான்..இவற்றைக் குறித்தெல்லாம் மறந்தும் கூட பேச முற்படுவதில்லை இந்த முற்போக்கு அரசாங்கம் ..

மானியத் தொகையை சிறுபான்மை பெண்களின் கல்விக்கு செலவிடப் போவதாக அக்கறை காட்டுகின்றனர்..ஆனால் தேசத்தின் பல மாநிலங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிக் கல்வியைக் கூட பெறமுடியாமல், பாலியல் பண்டங்களாக, பஞ்சாயத்தினரின் பொதுச் சொத்தாக, பாதுகாப்பின்றி, பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள பெரும்பான்மை இந்து மத இளம் சிறுமிகள், பெண்களைப் பற்றி பாராமுகமாக இருக்கின்றனது இந்த அரசு..

முஸ்லிம் பெண்களை காக்க வந்த ரட்சகர்களாக தங்களை காட்டிக் கொள்கின்றனர்..ஆனால் பிரதமரின் மனைவி, எம்பியின் மகனால் துரத்தப்பட்ட பெண் இப்படி பாதிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான அபலைகள் குறித்து சிந்திக்காத சிந்தனைக் குருடர்களாக இருக்கின்றார்கள் ஆட்சியாளர்கள்..

இப்படி சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத ஆட்சியாளர்களை சகித்துக் கொண்டு வாழும் பெரும்பான்மை மக்கள்,  நாளை அவர்களது கை தங்களது அடிமடியில் இருப்பதையும் பிடுங்க துணியும் என்பதை மறந்து வாழ்கின்றனர் அல்லது மறக்கடிக்கப்பட்டுள்ளனர்..அதற்கான முன்னோட்டமாக  பணமதிப்பழிப்பு, GST,  வங்கிகள் பாதுகாப்பு மசோதா என்று ஏற்கனவே சோதனை வெள்ளோட்டங்கள் துவங்கப்பட்டுவிட்டது..இன்னும் வெறும் செய்திகளாகவே நாட்டு நடப்புகளை பார்த்து வந்தால் நாளை தங்களுக்கான சம்பவங்களாக அவை மாறும்போது கைசேதமான நிலையில் காப்பாற்றுபவர்கள் யாருமில்லாத சூழல் உருவாகும் என்பதில் ஐயமில்லை..

அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டு களமாடும் துணிவு ஒவ்வொரு குடிமகனிடத்திலும் இருந்தால்தான் ஆளுபவர்களுக்கு குடிமக்கள் மீது அக்கறை இல்லாவிடிலும் அச்சமாவது அவர்களை நன்மை செய்யத் தூண்டும்..

செய்வார்களா..?

R அபுல் ஹசன்
9597739200

Comments

  1. செருப்படி கேள்விகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!