இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

வம்பர் 11 – தேசிய கல்வி தினம். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சுதந்திரப் போராட்ட வீரருமான மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பிறந்த தினமே தேசிய கல்வி தினமாக அனுசரிக்கப்படுகின்றது.



மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்திய சுதந்திரத்திலும், சுதந்திர இந்தியாவை கல்வியில் சிறந்த தேசமாக மாற்றுவதிலும் மெளலானாவின் பங்களிப்பை நாம் நமது எதிர்கால சந்ததிக்கு கடத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இளமைப்பருவம்:
மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் இளமைக் காலங்களில் இருந்து இன்றைய மாணவ, இளைஞர்கள் படிக்க வேண்டிய பாடம் மிக அதிகம். இறைவனின் ஆலயம் அமைந்த மண்ணில், கல்வியிலும், அறிவிலும் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்த மெளலானா, சிறு வயது முதலே அறிவைத் தேடுவதிலும், தான் பெற்ற கல்வியை பிறருக்கு கற்பிப்பதிலும் நேரத்தை செலவழித்தார்கள். இளவயதிலேயே உருது, ஹிந்தி, பெர்சியன், பெங்காலி, அரபி, ஆங்கில மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்கள். அதோடல்லாமல் இஸ்லாமிய மார்க்கக் கல்வியிலும், கணிதம், அறிவியல், வரலாறு, தத்துவ பாடங்களையும் கற்று தெளிந்தார்கள்.

தனது பன்னிரண்டு வயதிற்கு முன்னரே நூலகம், வாசிப்பறை, விவாத அரங்கங்கங்களை துவக்கி அறிவுசார் பரப்புதலை மேற்கொண்டிருந்தார்கள். 14 வயதில் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதியதுடன் தன்னை விட இருமுறை வயதில் மூத்தவர்களுக்கு பாடங்கள் எடுத்தும் வந்துள்ளார்கள்.

தனது 12 வயதில் அல்-மிஸ்பாஹ் என்ற வார இதழின் ஆசிரியராகவும், நைரங்-இ-ஆலம் என்ற கவிதை இதழ் ஆசிரியராகவும் இருந்தவர், 1903ல் தனது 15வது வயதில் லிசான் – உஸ் – சித்க் என்ற மாத இதழையும் துவக்கினார்கள்.

1912-ல் அல்-ஹிலால் என்ற உருது பத்திரிகையைத் துவக்கி ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களை வெளிப்படையாக எதிர்த்து எழுதியதன் விளைவாக 1914-ல் அந்த பத்திரிகை தடை செய்யப்பட்ட்து. தனது பத்திரிகைகள் மூலமாக முஸ்லிம் இளைஞர்களை சுதந்திரப் போரில் ஈடுபட உத்வேகம் அளித்ததுடன், மதக் கலவரங்களால் சீரழிந்துகிடந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையினை மறுகட்டமைப்பு செய்யும் உன்னத பணிகளையும் மேற்கொண்டார்கள்.

எத்தனை தடைகளைக் கண்டாலும் அசராமல் தனது சுதந்திர வேட்கையினை அதிகரித்துக் கொண்டே இருந்தார்கள் மெளலானா அவர்கள். அல்-ஹிலாலைத் தொடர்ந்து அல்-பலக் என்ற பத்திரிகையைத் துவக்கி இன்னும் தீவிரமாக வெள்ளையர்களை எதிர்த்து எழுதினார்கள். விளைவு இந்த முறை தடையுடன் சேர்ந்து சிறைவாசமும் பரிசளிக்கப்பட்ட்து. 1920 ஜனவரி 1ல் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

சுதந்திர போராட்ட வீரர்:
சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மெளலானா அவர்களது கவனம் முழுவதுமாக சுதந்திரப் போராட்டத்தின் பக்கம் திரும்பியது. ஒத்துழையாமை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் நெருக்கமாகி மெளலானா அவர்களை காங்கிரசு கட்சியில் இணைத்து விரைவில் அதன் தேசிய தலைவராகவும் ஆக்கியது. 1923ல் தனது 35வது வயதில் மிக இளவயதில் காங்கிரசு தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்கள். ஒத்துழையாமை இயக்கத்தின் போதும் அபுல் கலாம் ஆசாத் அவர்கள் சிறை சென்றார்கள்.

இஸ்லாமிய மார்க்கம் கூறும் விழுமங்களை தவறாது கடைபிடித்து வந்த மெளலானா அவர்கள் எளிமையான வாழ்வு வாழ்ந்தார்கள். தனது உடைகளை காதியில் நெய்து அணிந்தார்கள். காந்தியின் அஹிம்சையின்பால் ஈர்ப்பு கொண்டு அதனை பரப்பியும் வந்தார்கள். குறுகிய காலத்தில் காங்கிரசின் நேரு, நேதாஜி போன்ற பெரும் தலைவர்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற்றார்கள். அதே நேரத்தில் கிலாஃபா இயக்கத்திலும் பொறுப்பு வகித்ததுடன், அலி சகோதர்ர்களுடனும் நெருக்கமானவராக இருந்தார்கள்.

1930ல் நடந்த உப்பு சத்யாகிரகத்தை தலைமையேற்று நடத்திய மெளலானா அவர்கள் கைது செய்யப்பட்டு 1931 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

பதவிக்காக எதுவும் செய்யும் தலைவர்களுக்கு மத்தியில் தான் போட்டியிடாமல் தேர்தலை ஒருங்கிணைத்து நட்த்திக் கொடுத்தார்கள். மெளலானா அவர்கள் 1939ல் மீண்டும் காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு 1941ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்கி அதனால் கைது செய்யப்பட்டு சிறையும் சென்றார்கள்.

முதல் கல்வி அமைச்சர்:
இரண்டாம் உலகப்போர் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த போது, 1946ல் தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்து நேருவை தலைவராக்கினார்கள். நேருவின் தலைமையில் இடைக்கால ஆட்சியில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் தேசத்தின் கல்வித் துறை தலைவராக நியமிக்கப்பட்டார்கள்.

சுதந்திரத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதல் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட அபுல் கலாம் ஆசாத் அவர்கள் தேசத்தின் கொள்கைகளை வகுப்பதிலும், அனைவரும் ஆரம்பக் கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில் தேசிய அளவில் பள்ளிகள், கல்லூரிகள் கட்டமைப்பது தொடர்பான திட்டங்களை வகுப்பதிலும் நேருவிற்கு உறுதுணையாக இருந்தார்கள்.

நாட்டின் முதல் கல்வி அமைச்சராக மெளலானா அவர்கள் கிராமப்புற, பெண்களுக்கு கல்வி வழங்குவதிலும், வயது வந்தோர் கல்வி, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, 14 வயது வரை இலவச கட்டாய ஆரம்பக் கல்வி, பெண் கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழன்ங்கினார்கள்.

”ஒரு அடிப்படை குடிமகனுக்குரிய கடமைகளை சரிவர நிறைவேற்ற ஒவ்வொரு தனிநபரும் ஆரம்பக் கல்வியை பெற வேண்டியது அவரவர் பிறப்புரிமை என்பதை நாம் மறக்க்க் கூடாது” - அபுல் கலாம் ஆசாத்

மௌலானாவின் சாதனைகள் :
 புதுடில்லியில் மத்திய கல்வி நிறுவனத்தை நிறுவியது..
 1951ல் நாட்டின் முதல் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை( Indian Institute of Technology) நிறுவியது..
 1953ல் UGC ஐ உருவாக்கியது..
 இந்திய அறிவியல் கழகம் ( Indian Institute of Science, Bangalore), டில்லி பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப்ப் பிரிவு இவற்றிற்கு அடிகோலியது..

ஆகியவை மெளலானா அவர்களது சாதனைகளாகும். தேசத்தின் கல்வி வளர்ச்சியில் IIT பெரும்பங்காற்றும் என்று அசையா நம்பிக்கை வைத்திருந்தார்கள்..

உயர்தொழில்நுட்பக் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் இந்த நிறுவன்ங்கள் ஒரு மைல்கல்லை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை - அபுல் கலாம் ஆசாத்

இறுதியாக..சுதந்திர இந்தியாவை உருவாக்கியதிலும், சுதந்திரத்திற்கு பிறகு கல்விக் கேந்திரமாக தேசத்தைக் கட்டமைத்ததிலும், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்ததிலும் மெளலான அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பங்களிப்பு வரலாற்றின் பொன்னேடுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது பெயரைத் தாங்கி வீற்றிருக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கல்விக்கான அவரது அளப்பரிய சேவைகளை தனது ஒவ்வொரு செங்கல்லிலும், மண்துகளிலும் தாங்கி நிற்கும். நாமும் அவரது பணிகளையும் பங்களிப்பையும் நமது இதயங்களில் உள்வாங்கி, உயிர்ப்புடன் வைத்திருந்து அதனை நமது அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வரலாற்றிற்கு மீண்டும் இத்தகைய அபுல் கலாம் ஆசாத்களை உருவாக்கி வழங்கும் பொறுப்பு நம் அனைவர் மீதும் உள்ளது.

-அபுல் ஹசன் R

Comments

Post a Comment

Popular posts from this blog

சென்று வா..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!