நம் தலைமுறைக்கான சினிமா..அருவி


நோய் பீடித்துள்ள ஒரு சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சமூகம் மீதான கோபம்,  ஆதங்கம்,  தன் அடிமனதில் தேங்கியிருந்த ஆசைகள், ஏக்கங்கள், கவலைகள், சந்தோசங்கள் என்று உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டியிருக்கும் திரைப்படம் அருவி..

தமிழ் சினிமாவில் நான் அறிந்தவரையில் எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகள், வாழ்வியல், அதற்கு பின் உள்ள அரசியல் பற்றி பேசியுள்ள முதல் திரைப்படம் அருவி..

உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு ஏமாற்றாத திரைப்படம்..

ஒரு படைப்பு நமது சிந்தனைகளை சில காலமாவது ஆட்சி செய்ய வேண்டும்..நம்மை தூங்க விடாமல், உட்கார விடாமல், நடக்க விடாமல் பாடாய்ப்படுத்த வேண்டும்..அப்படியான ஒரு படைப்பு அருவி..

பொதுவாக சமூக கட்டுப்பாடுகள் என்று யாராவது பேச ஆரம்பித்தாலோ, எழுதியிருப்பதை படிக்க நேர்ந்தாலோ, அதைப்பற்றி பேசும் திரைப்படங்கள் என்றாலோ காந்தியின் குரங்கு பொம்மைகள் போல காது, வாய், கண் இவற்றை மூடிக்கொண்டுவிடுவது வழக்கம்..ஏனென்றால் பெரும்பாலும் ஃப்ரீ செக்ஸ்,  குடும்பக் கட்டமைப்பை சிதைத்தல், ஒழுக்கக்கேடான பழக்கங்களில் ஆணுக்கு இணையாக பெண்ணை நிறுத்துதல் என்று மேற்கு, இந்தியாவின் மீது திணிக்க நினைக்கும் கலாச்சார போராகவே அவை இருக்கும்போது நமக்கும் பார்ப்பதற்கு போராகவே இருக்கும்..

முதல் முறையாக அப்படி இல்லாமல் சமூக கட்டுப்பாடு என்ற போலியான பிம்பத்தில் திணிக்கப்பட்டு வரும் நடைமுறை யதார்த்த சிக்கல்களை வெளிப்படுத்தி, எழுந்து நின்று கைத்தட்ட வைத்த திரைப்படம் அருவி..

திரைப்படத்தில் ஒரு இடத்தில் நாயகி பேசுவார்.."1000 ரூபாய் கொடுத்து ஒரு குடும்பம் திரையரங்கிற்கு வந்தால் திரும்ப எடுத்துச் செல்ல ஏதாவது இருக்க வேண்டும் அந்த திரைப்படத்தில்..என்ன 'பீப்' படம் எடுக்குறாங்க இப்போ " (இங்க பீப் வந்த இடத்துல அந்ந சவுண்டுதான் வந்துச்சு) ..

மிகவும் தைரியத்துடன், என் படத்துல அந்த மாதிரி திரும்ப எடுத்துச் செல்ல நிறைய இருக்கிறது என்று கர்வத்துடனேயே அந்த காட்சியும், வசனமும் வைத்திருக்கிறார் இயக்குனர் ..மனதைத் தொட்டு சொல்கிறேன் இந்த படத்தைப் பார்த்துவிட்டு எவ்வளவு பெரிய்ய்ய இயக்குனர் படம் என்றாலும் தயக்கத்துடனேயே நோக்க முடியும்..படம் அப்படி ஒரு ஆக்கம்..அது ஏற்படுத்தியுள்ள தாக்கம்..!

படத்தில் ஆண்கள் கேலி செய்யப்படுகிறார்கள்..தவறு செய்யும் ஆண்கள்..ஒரு ஆணாக அந்த இடத்தில் நான் ஏன் அவ்வளவு சந்தோசப்பட்டேன் என்று தெரியவில்லை..இவனுங்க இப்டித்தான் ஆகணும் என்று நினைத்து நினைத்து சிரிக்க வைத்தன ஒவ்வொரு காட்சியும்..

நடுத்தர வர்க்கத்தின் குடும்ப ப்ரச்னைகளை நடுத்தெருவிற்கு இழுத்து வந்து நாரடிக்கும் ரியாலிட்டி ஷோவை
உண்மையாகவே வச்சு செஞ்சுருக்காங்கய்யா இந்த திரைப்படத்தில்..

படத்தின் வசனங்கள்..குறிப்பாக நாயகி இடைவிடாமல் சில நிமிடங்கள் பேசும் அந்த காட்சி, கொஞ்சம் பிசகியிருந்தாலும் பிரசங்கமாக, உபன்யாசமாக ஆகியிருக்கக் கூடிய நிலையில் மெய்மறந்து, லயித்து, ரசிக்க செய்த படக்குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் .. அந்த கணம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டும் என்று தோன்றியது..கொஞ்ச நாளைக்கு சமூக வலைத்தளத்தை அந்த காட்சிகள் ஆக்ரமிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..

முதல் பாதியின் இறுதிக்காட்சிகள், இடைவேளைக் காட்சி செம்ம மாஸ்..குறிப்பாக டீவி நிகழ்ச்சி செட்டுக்குள் படம் வந்ததில் இருந்து  நம்மை அப்படியே கட்டிப்போட்டுவிடுகின்றனர்..ஒருசேர கவலைகள் மறந்து சிரிக்கவும்,  சமூகத்தின் இழிநிலை நினைத்து வருத்தப்படவும் வைத்திருக்கின்றனர்..

இரண்டாவது பாதியின் ஆரம்ப காட்சிகள் வாவ்..ஆசம் ரகம்..கண்டிப்பாக நாலு சுவற்றுக்குள் இருபது பேரை அடைத்து இவ்ளோ அருமையான காட்சிகளை உருவாக்குவது மிகவும் சிரமம்..பனியாரக்கிழவி கதை பால்யகால உணர்வுகளை ஒவ்வொருவருக்குள்ளும் கிளறிவிடுகிறது..நிகழ்ச்சி நடத்துபவரை கலந்து கொள்பவராக வைத்து செய்திருக்கும் கள்ளக்காதல் நிகழ்ச்சி செம்ம கலாய் ..செம்ம கலாய்..

அந்த நிகழ்ச்சி செட்டை விட்டு படம் வெளியேறி பயணிக்கத் துவங்கியவுடன் சிரித்தது போதும், கொஞ்சம் எல்லாரும் அழுங்க என்று இயக்குனர் உத்தரவு போட்டுவிடுகிறார்..இறுதிக்காட்சி வரை இவ்வளவு நேரம் சிரிக்க வைத்த திரைப்படம்தானா என்ற கேள்வி எழாமல் இல்லை..குறிப்பாக அந்த காணொலி வரும் நான்கு நிமிடங்கள் விவரிக்க வார்த்தைகள் இல்லை..

எய்ட்ஸ் எப்படி பரவியது என்று தெரியவில்லை என்பதை அப்படியே விட்டிருக்கலாம், காட்டியிருக்க தேவையில்லை என்ற ஒன்றைத் தவிர படத்தில் குறையேதும் இல்லை..

படத்தில் மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை வஞ்சித்துள்ளனர் என்று சொல்லும்போது படத்துக்கு தேவைங்கறதால வச்சோம்ன்னு பல இயக்குனர்களின் டெம்ப்ளேட் வார்த்தையை பயன்படுத்தியிருக்க முடியும் என்றாலும் கூட ஒரு சிறு ஆபாசமான காட்சி கூட இல்லாமல் காட்சிப்படுத்தியதற்கு இயக்குனரை உச்சி முகர்ந்து பாராட்டியே தீர வேண்டும் ..

நாயகி தனி ஆளாக படத்தை தாங்குகிறார்..உடல் எடையை குறைத்து நடை, பாவனை அனைத்திலும் ஒரு நோயாளியாகவே தன்னை மாற்றி வாழ்ந்திருக்கிறார்..மிகச் சிறந்த வரவு தமிழ் சினிமாவிற்கு..

திரைப்படம் முழுவதும் ஒரு திருநங்கையை முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது, அவரும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது..

ஒவ்வொரு கதாபாத்திரமும் தேவை அறிந்து, மிகை உணர்ச்சிகள் இல்லாமல் மிகச் சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளார்கள்..அனைவருமே கதாபாத்திரங்களாக மாறியுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் ..

அறம் திரைப்படத்தில் கண்களில் தேங்கிய நீர், அருவியில் பெருக்கெடுத்து வழிந்தோடியது..

நூறாண்டு கால தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திரைப்படம் அருவி என்று உறுதியாக சொல்ல முடியும் ..இவ்வளவு அருமையான ஒரு படைப்பை உருவாக்கிய இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் படக்குழுவினருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்..

தொடர்ந்து இப்படியான ஆக்கப்பூர்வமான படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்..

அபுல் ஹசன்

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!