One stop post : மெர்சல்.!



முன்குறிப்பு :

எதையும் தீவிரமாக ஆதரிப்பதும், எதிர்ப்பதும் சரியல்ல என்பதே எனது நிலைப்பாடு. இந்த பதிவு நடப்பு சூழலைக் குறித்த ஒரு பார்வை அவ்வளவு தான்..யாரும் யோக்கியர்கள் என்று ஒரேயடியாக சான்றிதழ் வழங்குவதற்கல்ல..

எந்த தொலைக்காட்சி நிகழ்வை விமர்சித்தார்களோ அதே தொலைக்காட்சி நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கவண் குழுவினர் நம் நினைவில் உள்ளனர். இதே படக்குழு நாளை எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம்..ஏனென்றால் இது ஒரு வியாபாரம்..விற்பனை தடைபட்டதென்றால் இறங்கிவர தயங்கமாட்டார்கள் என்பதை கூறிக்கொண்டு..!

கவனிக்கப்படாத ப்ரச்னை..

GST, Digital india பற்றி எரிய ஆரம்பித்துவிட்ட நிலையில் மெர்சல் திரைப்படத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் தனியார் மருத்துவமனைகளுடன் டை அப் வைத்துக்கொண்டு காசு பார்ப்பதாக வருகிறது..இதனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை..ஆனால் உண்மையில் இந்த மோசடி பரவலாக அரங்கேறி வருகிறது..எனது மச்சான் சமீபத்தில் திருச்சியில் நடைபெறும் இந்த ஆம்புலன்ஸ் மோசடி பற்றி கூறியிருந்தார்..

உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அற்ப காசுக்காக இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்..

சமூக சீர்திருத்த படமா மெர்சல்..?

படம் வந்த அன்று இந்த கேள்வியை கேட்டிருந்தால் இல்லை என்று உடனே சொல்லியிருக்கலாம்..ஆனால் பாஜக ஒரு விசயத்தை எதிர்க்க ஆரம்பித்தால் அது சமூக ப்ரச்னையாக பரிணமித்துவிடுகிறது..டிசைன்ல அப்டிதான் இருக்கு..

உண்மையில் பாஜகவினர் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் இந்த படம் கண்டிப்பாக மற்றுமொரு விஜய் படம் என்ற அளவில் முடிந்திருக்கும்..மக்களும் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்ச நாள் முக்கியமான காட்சிகளைப் பற்றி பேசியும், எழுதியும், சிலாகித்தும், மறந்துமிருப்பார்கள்..கத்தி வந்தபோது சில நாட்கள் விவசாயம் பற்றிய பதிவுகள் உலா வந்தது போல.!

என்ன செய்ய, வேலியில் போனதைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுவிட்டனர்..இதுவும் கூட டிசைன்ல இருக்கு..

இப்போ இந்த படத்தை சமூக சீர்திருத்த படம் இல்லைன்னு சொன்னா என் வீட்டுக்குள்ளிருந்தே Angry ரியாக்சன் வரும்..


படம் பற்றி :

தாக்கம் இல்லாமல் எந்த படைப்பும் உருவாக முடியாது. சிலர் யதார்த்த நிகழ்வுகளின் தாக்கத்தில் படம் எடுக்கிறார்கள். சிலர் வெளிநாட்டு திரைப்படங்களில் இருந்து..அட்லி கொஞ்சம் வித்தியாசமாக பழைய தமிழ் திரைப்படங்களில் இருந்து தாக்கு தாக்கென்று தாக்குகிறார்..அவ்ளோதான் வித்தியாசம்.

ஆனால் பார்க்கும் மக்கள் அதனை உணராமலோ அல்லது திரைக்கதை திருப்பங்களில் உந்தப்பட்டு அவற்றை மறந்துவிடச் செய்வதோ முக்கியம். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் தப்பித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ..அதில் கூடவே இப்போ இலவச மருத்துவம், GST, Digital India எல்லாம் சேந்து வேற லெவலில் இருப்பதால் இப்போ இதைப்பற்றி பேசுவது உசிதமாக இருக்காது.

ஒரே ஒரு ஆதங்கம் டைட்டில் கார்டில் காட்சிகள், வசனங்களுக்கு சமூக வலைதள போராளிகளுக்கு ஒரு நன்றி சொல்லியிருக்கலாம். நிறைய வசனங்கள் நம்மாளுங்க பறக்க விட்டதுதான்..மருத்துவம் குறித்த பேட்டி, சிங்கப்பூர் பற்றிய வசனம் உட்பட..

தான் பாதிக்கப்பட்ட ஒரு விசயத்தை பெரிய திரையில் தன் அபிமான நட்சத்திரம் பேசும்போது மக்களின் இதயம் அங்கே இணைந்துவிடும்..அதுவும் வடிவேலுவின் உடல்மொழியில் என்றால் சொல்லவும் வேண்டுமா.?

இப்படி ஒரு சில விசயங்களை தாண்டி படத்தில் நிறைய இடங்களில் காட்சிகள் குறித்த டீட்டெயிலிங் இல்லாதது, மேஜிக்கிற்கும் விட்டலாச்சார்யா ஐட்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாத மாதிரி எடுத்திருப்பது போன்ற Flaws இருக்கிறது ..ஆனாலும் திரைக்கதை, உணர்ச்சிகரமான காட்சிகள் அவற்றை மற(றை)க்கச் செய்துவிடுகிறது.

மருத்துவர்கள் எதிர்ப்பு பற்றி..!

ஒட்டுமொத்தமாக மருத்துவத்தை எதிர்ப்பது போல உள்ளதாக சில மருத்துவ சங்கங்கள் எதிர்த்துள்ளன. படத்தில் தனியார் மருத்துவ கொள்ளை பற்றி காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் எந்த விசயமாவது இல்லை, சுத்தப் பொய் என்று எந்த மருத்துவராவது சொல்ல முடியுமா. ?

நோயாளிகளை சேர்க்க கமிசன் தரப்படுவதில்லையா.? பெருச்சாளி கடித்து குழந்தை அரசு மருத்துவமனையில் இறக்கவில்லையா.? ஆக்சிஜன் இல்லாமல் மரணங்கள் நிகழவில்லையா.? மருந்துகளுக்கு 12% GST இல்லையா.? இதில் எதனைப் பொய்யென்று கூறுவார்கள்.?

இதனை எதிர்க்கும் மருத்துவர்களைப் பார்த்து படத்தில் விஜய் கேட்பது போல மோசடி பேர்வழிகளுக்கு தான் இவற்றில் கோவம் வரும்..உங்களுக்கு வருகிறதா என்றே கேட்கத் தோன்றுகிறது.!

விஜய் :

ரஜினி, கமலுக்கு முன்னதாகவே விஜய் அரசியலில் குதித்துவிடுவார் என்றே தெரிகிறது.  திமுகவும், அதிமுகவும் இப்போது பாஜகவும் அதற்கான அச்சாரத்தை ரொம்ப பலமாக போட்டுவருகின்றறர்.

 2011ல் காவலன் படத்தை வெளிவரவிடாமல் செய்ததில் இருந்து ஆரம்பித்த அவரது பயணம் இப்போது மெர்சலில் வந்து நிற்கிறது.

எதிர்பார்ப்பு..

தமிழ், தமிழன் என்று உணர்ச்சி அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் Inclusive Politics பக்கம் நகர வேண்டும் ..

ஒரு உச்ச நட்சத்திரம் தனது திரைப்படத்தில் சொல்ல வரும் கருத்துகளை உள்வாங்கியிருக்க வேண்டும்.  வேலாயுதம், துப்பாக்கி என்ற இரண்டு திரைப்படங்களில் காட்டப்பட்டது போல விச விதைகள் இனியும் தன் திரைப்படத்தில் தூவப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ..மதத்தை வைத்து பிழைப்பு நடத்துவது யாருடைய வேலை என்பதை நடப்பு நிகழ்வுகள் மூலம் அவர் உணர்ந்திருப்பார் என்றே நம்புவோம்..

அபுல் ஹசன்

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!