பேருந்துக்குள் நடைப் பயணம்...!


அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக 
பேருந்து நிறுத்தத்திற்கு சென்றேன்..
பேருந்தும் வந்தது
வழக்கம் போல் நிறுத்தத்தை விட்டு தள்ளியே நின்றது
காற்று புகக் கூட இடமில்லா பேருந்தில்
நானும் புகுந்து கொண்டேன்..

நீண்ட தூ(நே)ர பயணம் என்பதால்
அமர மனம் நாடியது..
கண்கள் இடம் தேடியது..
தூரத்தில் ஒருவர் எழுந்து செல்வது போல தோன்றியது,
சனக்கடலை நீந்தி அங்கு செல்வதற்குள் இன்னொருவர் அமர்ந்துவிட்டார்..
திரும்பிப் பார்த்தேன்
நான் நின்ற இடத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் இறங்கிவிட்டார்..
அங்கேயே நின்றிருக்கலாமோ என்று 
உள்மனம் உச்சுக் கொட்டியது..

நேரம் சென்றதே ஒழிய
அமர இடம்தான் கிடைக்கவில்லை..
எனக்கு பின்னால் ஏறியவர்கள் எல்லாம் அமர்ந்துவிட்டனர்,
நானோ அமர இடம் தேடித் தேடி அயர்ந்துவிட்டேன்..

சரி நின்ற இடத்திலேயே நிற்போம் என்று அங்கேயே நின்றேன்..
அங்கு அமர்ந்திருந்தவரோ எழுந்துவிடுவேனா பார்க்கலாம் என்பது போல
சற்றும் நகராமல் அமர்ந்திருந்தார்,
வீணையுடன் இருக்கும் கலாமைப் போல..

வெளியே வாகன நெரிசல்,
உள்ளே மக்கள் நெரிசல்,
சென்னையின் இருபெரும் அடையாளங்கள்..
நடுவில் இருதலைக் கொள்ளி எறும்பாய் நான்..

நடப்பதைவிட நிற்பது கொடியது
உள்ளுக்குள் சொல்லிக் கொண்டேன்..

தேர்தலில் நிற்கக் கூட எளிதில்
இடம் கிடைத்துவிடுகின்றது,
தலைநகரப் பேருந்துகளில் அமர்வதற்கு 
இடம் கிடைப்பது அரிதாகிவிட்டது..

அமர்ந்திருப்பவர்கள் எல்லாம் 
என்னைப் பரிதாபமாகப் பார்ப்பது போல இருந்தது..

அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் நண்பனிடம்
என் அவஸ்தையையும் பகிர்ந்துகொண்டேன்,
குறுஞ்செய்தி மூலமாக..
பேருந்திற்குள் நடைபயணமா என்று 
அவன் தன் பங்கிற்கு எரிச்சலூட்டினான்..

ஒரு வழியாக இடம் கிடைத்துவிட்டது,
நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்..
பெருமூச்சு நிற்பதற்குள் பேருந்து நின்றுவிட்டது..
ஆம் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது,
இறங்கி நடந்தேன்
வீட்டிற்கு செல்வதற்கான அடுத்த பேருந்து நிற்கும் இடத்தை நோக்கி..!

R அபுல் ஹசன் 
9597739200

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!