கான்டாக்ட்ஸ்..!

சகுனி திரைப்படத்தில் ஜெயிலில் தன்னைப் பார்க்க வரும் சந்தானத்திடம் சிறைக்குள் கிடைத்த கோட்டா சீனீவாசராவ் தொடர்பை கார்த்தி இப்படி சொல்வார்..'கான்டாக்ட் ரஜினி..'
கான்டாக்ட் (Contact) - தமிழில் தொடர்புகள், நமக்கு மிக அவசியமானது..
அண்ணாவிற்கு கிடைத்த Contact பெரியார்..
கலைஞர், எம்.ஜி.ஆருக்கு அண்ணா..
ஜெயலலிதாவிற்கு கிடைத்த Contact எம்ஜிஆர்..
சசிகலாவிற்கு கிடைத்த Contact ஜெயலலிதா ..
சீமான், வைகோ, பழநெடுமாறன் இவர்களுக்கு கிடைத்த Contact பிரபாகரன் 😁😁..
சென்ற தேர்தலில் திருமா, விஜயகாந்த், காம்ரேடுகளுக்கு கிடைத்த Contact வைகோ😂😂..
தொடர்புகள் நம்மை, நமது பாதையை புரட்டிப்போட்டுவிடக் கூடியவை..நல்ல வகையிலா அல்லது தீய வகையிலா என்பதை நாமும் நமது தொடர்புகளுமே தீர்மானிக்கவல்லவை..
ஊடகத்துறையில் இருக்க வேண்டும் என்பது சிறுவயது கனவு. ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தில் இரண்டு முறை நேர்முகத் தேர்வு வரை சென்றிருக்கிறேன். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் பயணம் திசை மாறி இறைக்கருணையால் நல்ல வேலை கிடைத்து அதில் பயணிக்க ஆரம்பித்துவிட்டேன்.
சென்னைக்கு வந்த பிறகு எழுத ஆரம்பித்து சமரசத்தில் துவங்கி பல பத்திரிகைகள், இணையதளங்கள், முகநூல் என்று தினமணி வரை வந்து நிற்கின்றது.
நானும் 'பார் முழுசா ஊடகவியலாளனாக மாறிருக்கும் அபுவைப் பார்' என்ற நிலையை அடைய பகீரத முயற்சிகள் எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால் 'என்ன கொடும சார் இது' என்ற ரீதியிலேயே எனது முயற்சிகள் இருக்கின்றன.
மிக எளிதில் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்பவர்களில் நான் பார்த்து வியந்தவர்கள் வி.எஸ். முகமது அமீன் அண்ணனும், சகோதரர் நாகூர் ரிஸ்வானும்..
எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் பக்கீர் முகமது அண்ணன் இளம் எழுத்தாளர் என்று பதிவு போட்டு என்னை அறிமுகப்படுத்தியபோது நிறைய பெரிய நபர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். ரஹமத் அறக்கட்டளை முஸ்தபா ஐயா அவர்கள் வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்டார்கள். ஆனால் அந்த தொடர்புகளை தக்க வைத்துக் கொள்ள இயலாதவனாகிவிட்டேன்..
சத்தியமார்க்கம் இணையத்தில் தோழர்கள் தொடர் படிக்கும்போது நினைக்கவில்லை அதனை எழுதுபவரை நேரில் சந்தித்து உரையாடுவேன் என்று..டீக்கடை முகநூல் குழுமம் மூலம் நூருத்தீன் சகோ அவர்களது தொடர்பு ஏற்பட்டு சென்ற முறை இந்தியா வந்தபோது சந்திக்கும் வாய்ப்பு தவறி இந்த முறை சந்தித்துவிட்டேன்.. இறைவனுக்கே எல்லாப்புகழும்..
ஊடகவியலாளர்கள் ஒருங்கிணைப்பு, நோன்பு திறப்பு, பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்போது ஆர்வத்துடன் இன்று யாருடனாவது பேசி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு செல்வேன். (அதாவது கான்டாக்ட் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று) ஆனால் தேக்கி வைத்திருக்கும் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்த விடாமல் தயக்கம் அணைபோட்டுவிடும். வெறும் கையுடன் திரும்பி வந்துவிடுவேன்.
எனது மௌனத்தை உடைத்து முதல் வார்த்தை பேசுவது கடினம். எல்லா இடங்களிலுமே.. உரையாடல் செய்வது மாதிரின்னா பேச்சு தானா வந்துடும். நான் வெறும் உம் கொட்ட மட்டுமே செய்வேனோ (அறிவு குறைபாட்டால்) என்ற அச்சம் மேலிட்டு வார்த்தைகளுக்கு சீலிட்டுவிடுகின்றது..
நேற்று முன்தினம் IFT நடத்திய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களுக்கான பெருநாள் சந்திப்பிலும் அதே ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். வழக்கம் போல திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தை ஆகியே திரும்பினேன்.
ஐயா தீக்கதிர் குமரேசன், யாதும் ஆவணப்பட இயக்குனர் கோம்பை அன்வர், கவிஞர் நீதிராஜன், இயக்குனர் சிபி சந்தர், ஆனந்த விகடன் எழுத்தாளர் ஒருவர் என்று முக்கியமான ஆட்கள் வந்திருந்தனர்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு வசனம் வரும்..இந்த உலகத்தில் உள்ள சின்ன சின்ன பாவங்களில் முக்கியமான சின்ன பாவம் ஒரு எழுத்தாளனை பேசச் சொல்வது.. அது மிகப் பெரிய தவறு என்பதை நான் பல நிகழ்ச்சிகளில் உணர்ந்துள்ளேன்..என்னைப் பொறுத்தவரையில் உண்மையில் அவர்களால் தான் சிறப்பாக பேச முடியும்..ஏனென்றால் அவர்களிடம்தான் அதிகம் விசயஞானம் உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் மிகச் சிறப்பாக பேசினார்கள். முகநூலில் சாந்தமாக பதிவு எழுதும் தீக்கதிர் குமரேசன் அவர்கள் உணர்ச்சி பொங்க முழங்கினார் என்றே சொல்வேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் கோம்பை அன்வர் அவர்களிடம் மட்டும் வி.எஸ்.முகமது அமீன் அண்ணன் அறிமுகப்படுத்தினார். அதுவும் கிளம்பும்போது அவசரத்தில் அரங்கேறிய அறிமுகம். அடுத்த முறை பார்க்கும்போது நினைவில் இருப்பேனா என்று கூட தெரியவில்லை..
கான்டாக்ட்ஸ் ரொம்ப முக்கியம்..என்னை நான் நிலைப்படுத்திக் கொள்ள..தொடர்ந்து முயற்சிக்கின்றேன். .
                                                                                                                             
                                                                                                                           அபுல் ஹசன்
                                                                                                                             

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!