ஏனென்றால்..!

ஏனென்றால்...
==============


கிரிக்கெட் உலகப் போரில் இந்தியா பாகிஸ்தானை விழ்த்தி வெற்றி வாகை சூடி விட்டது.

நாடு முழுதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கின்றது.

பாகிஸ்தான் அனுதாபி பட்டாசை மீண்டும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டார்.

இனி என் தேசத்தில் வறுமை ஒழிந்து விடும்.

இந்நாட்டு மன்னர் யாவருக்கும் மூன்று வேளையும் வயிறு நிரம்ப உணவு கிடைத்து விடும்.

பட்டினி சாவுகள் இனி விழாது. 

அறுவடையின் முழு பயனும் விதைத்தவனை சென்று சேர்ந்துவிடும்.

அவன் இனி தற்கொலை செய்துகொள்ள மாட்டான்.

குடிசைகள் கோபுரங்களாகி விடும்.

காலைக்கடனை கழிக்க ஒதுக்குபுறம் தேடும் இழிநிலை இனி இராது.

தூங்கிக் கொண்டிருப்பவர்களை கடத்தவும் படுக்கையில் கிடத்தவும் துடிக்கும் ஈனப்பிறவிகளிடமிருந்து நடைமேடை வாழ்பவர்கள் விடுதலை அடைவர்.

ஊழலில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் எம் தலைவர்கள் இனி கருமமே கண் என வாழ்வர்.

அரசு அலுவலகங்களில் இனி கொடுக்கும் கையோ வாங்கும் கையோ இருக்காது.

கல்வி, சுகாதாரம் இலவசமாக அரசால் வழங்கப்பட்டுவிடும்.

தாய்மொழியில் தரமான அரசுக்கல்வி  எம் பிள்ளைகளுக்கு கிடைத்துவிடும்.

கல்வியை கடைவிரிக்கும் முதாலாளிகள் ஒழிந்துவிடுவர்.

படித்துவிட்டு வெளியில் வரும் கோடான கோடி எதிர்கால தலைவர்கள் தகுந்த வேலையினைப் பெறுவர்.

இந்தியனின் வரிபணத்தில் படித்து வெளிநாட்டிற்கு ஊழியம் செய்யும் துரோகம் இனி இருக்காது.

காலையில் வெளியில் செல்லும் மகள் பத்திரமாக வீடு திரும்புவாளா  என்று தினம் தினம் ரணமாய் கழிக்கும் நிலை இனி இங்கு தோன்றாது.

மனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் தாயாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் ஆண் கூட்டம் உருவாகிவிடும்.

 பாடம் படிக்கும் வயதில் பாரம் சுமக்கும் குழந்தைகள் இனி உருவாக மாட்டார்கள்.

ஜனநாயகக் கடமையான ஓட்டை இனி எம் மக்கள் விலை பேசி விற்கமாட்டார்கள்.

தன் வீடு, தன் பெண்டு, தன் வாழ்வு என்ற சுயநலப்போக்கு மாறி சமூக அக்கறை எங்கும் தழைத்துவிடும்.

பிறப்பால் உயர்வு தாழ்வு காணும் இழிநிலை நீங்கி விடும்.

காடுகளைக் காக்கும் மலைவாழ் மக்கள் ஒடுக்கப்படும் நிலை அழிக்கப்படும்.

அயல்தேசத்து நரிகள் எம் மண்ணில் ஊளையிட இனி வாய்ப்பிருக்காது.

இன்னும்.. இன்னும்..

என் தேசம் தலைநிமிர என்னென்ன தடைக்கற்கள் உள்ளனவோ அவை அனைத்தும் இனி பெயர்க்கப்பட்டுவிடும்.

ஏனென்றால் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வீழ்த்திவிட்டதே.

காந்தி நினைத்த தேசம் கனிந்துவிடும்.

ஏனென்றால் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வீழ்த்திவிட்டதே.

கலாம் கண்ட  கனவு நனவாகி விடும்.

ஏனென்றால் இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட்டில் வீழ்த்திவிட்டதே.

 அபுல் ஹசன் R

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!