இனியாவது ஒரு விதி செய்வோம்...!

இனியாவது ஒரு விதி செய்வோம்...!
 (சமரசம் 16-30,ஜூன் 2017 இதழில் பிரசுரமகியுள்ளது)



விதிகளை சரியாக பின்பற்றாமல் கட்டப்பட்ட , சரியாக ஆய்வுகளை மேற்கொள்ளாமல் அனுமதி அளிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதும் எரிந்து தரைமட்டமாகியுள்ளது.விபத்துக்குள்ளான இந்த கட்டிடத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்று வந்துள்ளதை இவ்விபத்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அனுமதி வழங்கப்பட்டதை விட கூடுதல் தளங்களைக் கட்டியுள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குறுகலான சாலைகளில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்களை அதிகார வர்க்கம் கண்டும் காணாமல் இருந்ததே இந்த கோரச் சம்பவத்திற்கு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

” வரும்முன் காப்பது சிறந்தது ” என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நமது அரசுகளுக்கோ “ கெட்ட பின் புத்தி “ என்பதே தாரக மந்திரமாக உள்ளது. விதிமீறல்கள் பற்றி ஒவ்வொரு முறை நாம் பேசுவதற்கும் சில பல அப்பாவி உயிர்கள் காவு கொடுக்கப்பட வேண்டியுள்ளது தான் வேதனை. பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகள் பற்றி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கும்பகோணத்தில் 91 பிஞ்சுக் குழந்தைகள் வாழ்வைத் துவங்குவதற்கு முன்பே மாண்டு போக வேண்டியதானது.. பிறகு ஸ்ரீரங்கத்தில் திருமண மண்டபத்தில் கல்யாண வீட்டிற்கு வந்த 48 பேர் கருமாதி ஆன பின்பே மக்கள் கூடும் விழாக்கூடங்களில் உள்ள வசதிகள் பற்றி பேச முனைந்தோம்.. பள்ளி வாகனங்களின் தரத்தை ஓட்டை வழியே விழுந்து உயிர் நீத்த குழந்தை நமக்கு நினைவுபடுத்தியது. அடிப்படை வசதிகள் அற்ற பட்டாசு தொழிற்சாலைகளால் சிவகாசியில் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பு பல அப்பாவி உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

            சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சென்னை சில்க்ஸ் போன்று பல மடங்கு விதிமீறல்கள் நடைபெற்று தான் வருகின்றன. மெளலிவாக்கம் கட்டிட விபத்து நம் கண் முன்னே வாழும் வரலாறு. சமீபத்தில் கூட காஞ்சிபுரத்தில் ஒரு பிரபல கல்வி அதிபரின் கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட விளையாட்டு மைதானம் இடிந்து விழுந்ததில் சில வடநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும் நமது அரசாங்கங்களையும், அதிகாரிகளையும் தற்காலிகமாகத் தான் விழிக்கச் செய்கின்றன. சில நாட்களுக்கு அதிரடி அறிவிப்புகளும், வழக்குகளும், சோதனைகளும் வேகமெடுக்கும். பிறகு மீண்டும் முன்பை விடவும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடுகின்றனர். ஊடகங்களும், மக்களும் கூட அடுத்த தலைப்புச் செய்தி வரும் வரை இவற்றைப் பற்றி பேசித் தீர்த்து விட்டு பின்பு மறந்து போய் விடுகின்றனர். இவற்றில் பெரும்பாலானவற்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையோடு சரி. குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி சுதந்திரமாக வெளியில் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதற்குரிய காரணங்கள் என்ன என்று பார்க்கும் தருவாயில் முதலாவது அந்த நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் பெரிய அரசியல்வாதிகளின் பினாமிகள் பெயரிலோ அல்லது பணம் படைத்தவர்களுடையதாகவோ இருக்கும். ஆதலால் பதவி, உயிர் மீதுள்ள ஆசை மற்றும் அச்சத்தின் காரணத்தால் அதிகாரிகள் அவற்றின் பக்கம் நெருங்குவதில்லை.

இரண்டாவது மிக முக்கிய காரணம் லஞ்சம். எத்தனை உயிர் போனாலும் கவலையில்லை. என்னுடைய பை நிரம்பினால் போதும் என்ற அதிகாரிகளின் மன்ப்பான்மை. பியூன் முதல் உயர் அதிகாரிகள் வரை முதலாளிகளின் பணமழை மற்றும் இதர கவனிப்பில் மிதக்கின்றனர். பணத்திற்காக நெருங்கிய இரத்த உறவுகளையும் விற்கத் தயாராக உள்ள மனிதர்கள் வாழக்கூடிய நாட்டில் மற்ற உயிர்களுக்கு மதிப்பேது ?

மூன்றாவதாக அரசாங்கங்கள். ஒவ்வொரு முறையும் இது போல ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று சில பல உயிர்கள் பறிபோனால்தான் அரசுகள் விழித்துக் கொள்ளுகின்றன.கும்பகோணம் தீ விபத்திற்கு பிறகு பள்ளிகளுக்கான ஒழுங்குமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. பேருந்திலிருந்து குழந்தை விழுந்து இறந்த பின்பு பள்ளி வாகன்ங்களுக்கான ஒழுங்குமுறைகள் பற்றி பேச ஆரம்பிக்கின்றனர்.

உலகிற்கே பட்டாசுகளை ஏற்றுமதி செய்யக் கூடிய பல்வேறு தொழிற்சாலைகளை உள்ளடக்கிய சிவகாசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய சிறப்பு மருத்துவ வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் இல்லாதது எவ்வளவு பெரிய சாபக்கேடு ? இது கூடவா ஆளுகின்றவர்களுக்கு தெரியாது ?  38 உயிர்கள் பலியான பிறகுதான் அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டுமா?

தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சட்டத்திற்கு புறம்பாக, முறையான அனுமதியின்றி கட்டப்பட்டு வருகின்றன.பல ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் முறையான அனுமதியின்றி, சரியான பாதுகாப்பு வசதிகளின்றி, அரசாங்கம் குறிப்பிடும் உள்கட்டமைப்பு வசதிகளின்றி, குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டு சிவகாசி,விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. போலி மருந்துகள் தயாரித்து மக்களின் உயிரோடு விளையாடும் போலி நிறுவனங்கள் அப்பாவி மக்களின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கின்றன.. இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வரவில்லையெனில் இன்னும் பல நூறு உயிர்களை நாம் இழக்க வேண்டி வரும்.

       சென்னை சில்க்ஸில் தீயினால் ஏற்பட்ட இழப்பை ஓரளவிற்கு காப்பீடு மூலம் ஈடுசெய்துவிடிவார்கள். ஆனால் அந்த கட்டிடத்த சுத்தி இருந்த சிறு குறு வியாபாரிகளோட ஒருநாள் வருமானம் கட்டிடம் எரிந்து வானளாவ வெளியான கார்பன் புகையோடு சேர்ந்து காற்றில் கலந்துவிட்ட்து. அதனை சென்னை சில்க்ஸ் நிர்வாகமோ, ஆட்சியாளர்களோ, காசு வாங்கி அனுமதி குடுத்த அதிகாரிகளோ ஈடு செய்ய முடியாது. சென்னை சில்க்ஸ்ல எரிந்தற்க்கு மற்ற கடைகளுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கமாட்டார்கள். கண்களுக்கு தெரியும் சென்னை சில்க்ஸ் கட்டிடத் தீயை அணைத்துவிடலாம். கண்களுக்கு புலப்படாத சிறு, குறு வியாபாரிகளின் வயிற்றில் எரியும் தீயை யாரும் அணைக்க முடியாது..

இந்த இழிநிலை இனியும் தொடரக் கூடாது. அலட்சியம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தால் ஒரு உயிரிழப்பு கூட நம்மில் ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது. அரசாங்கங்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பண முதலைகள் அனைவரும் தங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். மனித உயிர்களை மதிக்க வேண்டும்.சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். மீறுபவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.அப்போதுதான் மக்கள் மனதில் நம்பிக்கை பிறக்கும். இது போன்ற துயரங்கள் நடைபெறாமல் பாதுகாக்க முடியும்

                                                                                                                      அபுல் ஹசன் R

                                                                                                                         9597739200
                                                                                                                      

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!