தேறுமா ஆறு மாதம்?


தேறுமா ஆறு மாதம்?
(இந்த கட்டுரை சமரசம் 16-18 பிப்ரவரி இதழில் பிரசுரமானது)


            அரியணை ஏறி ஆறு மாதங்களை கடந்தாகிவிட்டது. முன்னெடுக்கப்பட்ட கோஷங்கள் எல்லாம் வெறும் முழக்கங்களாகவே முடங்கிவிட்டது. வளர்ச்சியின் நாயகனுக்கு ஓட்டு போட்டால் தங்கள் வாழ்வை வானளாவ உயர்த்தி விடுவார் என்று வாக்களித்த மக்கள் வாய்க்குள் விரலை வைத்துக் கொண்டுவிட்டனர். கருப்புப் பணத்தை கைப்பற்றி வழங்குவார் என்று எதிர்ப்பார்த்தவர்கள் தங்கள் இருப்புப் பணத்துக்கே மோசம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மடிகளில் கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டுள்ளனர். டீ கடையில் வேலை பார்த்தவர் நம் கவலைகளை நன்கு அறிவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் அவர் அதானி, அம்பானி என்று கோடீக்களின் கவலையை மட்டுமே கவனிக்கிறார் என்று வெம்பிக் கொண்டிருக்கின்றனர். பத்து வருடம் ஆகிவிட்டது. பக்குவப்பட்டிருப்ப(பா)ர் என்று பசலை கொண்டவர்கள் இன்று பரிவாரங்களின் ஆட்டம் பார்த்து பதறிப் போயுள்ளனர்.

                ஆட்சி காலத்தில் 10%ஐ முடித்துவிட்ட ஒரு அரசாங்கம் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதே அளவையாவது நிறைவேற்றியுள்ளதா என்று சீர்தூக்கி பார்ப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.  
            
1. பல்லிளித்த கருப்புப் பண இரட்சகம்

கருப்புப் பணத்தை மொத்தமாக மீட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பட்டியல் தர முடியுமா?, முடியாதா? என்று உச்சநீதிமன்றம் குட்டும் அளவுக்கு ஆட்சியாளர்களின் கருப்புப் பண இரட்சகம் இருந்துள்ளது. ஒட்டு மொத்த கருப்பும் வெள்ளையாக மாறி நாட்டிற்குள் திரும்பும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள் என்பது இவர்கள் பன்னாட்டு முதலைகளுக்கு காட்டிய கரிசனத்தில் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

2. ஆகாசப் பொய்யான விகாஷ் புருஷ்

“விகாஷ்  புருஷ்” என்று முழக்கமிட்ட கட்சியின் ஆட்சி  சென்றதன் நீட்சியாகவேத் தெரிகிறது. “அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கியது போல்” இந்தியாவை அப்படியே வளர்ச்சியின் உச்சானிக் கொம்பில் அமர்த்தி விடுவார் என்று நம்பி அளிக்கப்பட்ட வாக்குகள் ‘இலவு காத்த கிளி’ யாக மாறி விடும் சூழல் தான் இங்கு நிலவுகிறது. விலைவாசியோ, பணவீக்கமோ வெகுவாக குறைந்ததாகத் தெரியவில்லை. மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியாத நிலையில் தாங்கும் சக்தியை சோதிக்கும் விதமாக இரயில் கட்டணத்தை உயர்த்தியது. பிரீமியர் ரயில் கட்டணம் என்று நடுத்தர மக்களின் மடியில் கைவைத்தும் பார்த்தது.

3.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு

பெட்ரோல், டீசல் விலையை மட்டும்  10 முறை குறைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். 2012 ஆகஸ்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்த போது அப்போதைய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலை 72 ரூபாய்க்கு வழங்கியது. ஆனால் தற்போது அதே ஒரு பேரல் சர்வதேசச் சந்தையில் 60 டாலராக இருக்கும் போது அவர்கள் வழங்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 64 ரூபாய். நிதர்சனத்தில் இதனை விடவும் குறைவாக வழங்க முடியும் என்பதே வல்லுநர்களின் கூற்றாக உள்ளது. மக்களின் நலத்திட்டங்களில் தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசு வயிற்றில் அடிக்கும் சமையல் எரிவாயு மானியத்திட்டத்தில் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டது இப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு பின்பு முற்றிலும் நிறுத்தப்படலாம்.

4. ஆதார் அட்டையும், பாஜகவும்

காங்கிரஸ் ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அதனை பயனற்ற திட்டம், சட்ட விரோதமாக குடியேறுபவர்களை பாதுகாக்கும் முயற்சி என்று வர்ணித்தவர்கள் தற்போது ஆதார் அட்டையை அரசுத் திட்டங்களில் பயனடைய கட்டாய ஆவணமாக்க முடியாது என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டுவிட்டு சமையல் எரிவாயு மானியம் மற்றும் இன்ன பிற அரசு சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்கிற உத்தரவைப் பிறப்பித்து நடைமுறைப்டுத்தியும் வருகின்றனர். ஆதார் அட்டை குறித்த எந்தக் கொள்கையும் எங்களிடம் இல்லை என்று கூறியவர்கள் அதில் பாதுகாப்பு பலவீனங்கள் இருந்தும் இப்போது கட்டாயமாக்கியுள்ள கொள்கை முரண்பாட்டுக்கு என்ன காரணம் என்பது குஜராத் நாயகனுக்கு மட்டுமே வெளிச்சம்.

5. கிளீன் இந்தியா எனும் விளம்பரத் திட்டம்

இந்த ஆறுமாத ஆட்சியின் மணிமகுடமாக ஆள்பவர்கள் நினைப்பது “ஸ்வச் பாரத்” என்றும் “கிளீன் இந்தியா” என்று அழைக்கப்படும் திட்டம் அதாவது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும், அதன் மூலம் நாடு தூய்மையடைந்து விடும் என்பதே தாத்பர்யம். மேம்போக்காக நோக்கும்போது “இது ஆஹா திட்டமாக இருந்தாலும் உற்று நோக்கினால் இது ஸ்வாஹா திட்டம் என்பது தான் உண்மை”. இன்று தேசத்தை அழுக்கடையச் செய்து வருவது வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் கடலோரங்களில் கொட்டப்படும் அணு, இரசாயனக் கழிவுகள், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பயோ-வேஸ்ட் எனப்படும் மருத்துவ உயிர்க் கழிவுகள், இயற்கை வளங்களை நீர்த்து போகச் செய்யும் தொழிற்சாலைக் கழிவுகள், மண்ணை மலடாக்கும் நெகிழிக் கழிவுகள் இவையனைத்திற்கும் மேல் ஆள்பவர்கள், அதிகாரிகளின் உள்ளங்களில் உள்ள ஊழல் கழிவுகள். நிலைமை இவ்வாறிருக்கையில் கையில் துடைப்பத்தை ஏந்தி கொண்டு கூடவே புகைப்படக்காரர்களைக் கூட்டிக் கொண்டு சாலையில் விழுந்து கிடக்கும் இலைத்தழைகளை பொறுக்குவதுதான் இவர்களின் தூய்மை இந்தியா. அதிலும் இரவில் குப்பையைக் கொட்டி, விடிந்ததும் அதனை அள்ளும் விந்தையும் நடந்து தூய்மை இந்தியாவை சந்தி சிரிக்க வைத்தது. ஏற்கனவே விளம்பரப் பிரியர்களான பாலிவுட், கோலிவுட், டோலிவுட் ஜாம்பவான்களுக்கு மேலும் விளம்பரம் செய்ய இது ஒரு வாய்ப்பாகி போனது. அரசுப் பள்ளியில் பயிலும் ஓர் மாணவி மாதவிடாய் காலத்தில் தனது நாப்கினை  தூக்கியெறிய ஒரு ஒதுக்குப்புறமான குப்பைத் தொட்டியோ, சுகாதாரமான கழிப்பிடமோ இல்லாத ஒரு தேசத்தில் தூய்மை இந்தியா நிகழ்த்தப் போதும் சாதனைதான் என்ன? நடைபாதைகளில் உள்ள குப்பைகளைக் கூட்டுவதை பெருமையாக நினைக்கும் இவர்கள் அதே நடைபாதைகளை தங்கள் வசிப்பிடமாகக் கொண்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த செய்துள்ள முயற்சிகள் தான் என்ன? தினந்தினம் வல்லுநர்கள் வடிவமைத்து தரும் உயர்தரமான பைஜாமாவை அணிந்து கொண்டு தாயைப் பார்க்க சென்றாலும் கேமரா எங்குள்ளதோ அந்த திசையில் முகத்தை வைத்து படம் காட்டும் ஒரு நபருக்கு சக மனிதனின் கழிவை தன் கைகளால் சுத்தம் செய்யும் அவலத்தைக் குறித்து சிந்திக்க நேரம் இருக்குமா? நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் குடிமகனும் சுத்தமான இருப்பிடம், சுகாதாரமான உணவு, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளை தங்கு தடையின்றி பெறும்போது தேசம் தன்னாலே தூய்மையாக மாறும் என்பதை தூய்மை இந்தியா முன்னோடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

6. மேக் இன் இந்தியா

   பாரத அரசின் பெருமைத்திட்டங்களில் மற்றொன்று மேக் ஆன் இந்தியா படித்தவர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் பெயர் வைக்கப்பட்டு நாட்டின் பெரும்பான்மையினரான பாமரர்களுக்கு மருந்துக்கும் பயனளிக்காத திட்டம். வெளிநாடுகளில் உள்ள பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இந்தியாவின் எஞ்சியுள்ள இயற்கை வளங்களை தாரை வார்க்கும் இந்த திட்டம் மூலம் விகாஷ் புருஷின் அரசு “ஆலம்பனா, நான் உங்களின் அடிமை” என்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு சொல்லாமல் சொல்கிறது. இத்திட்டம் மூலம் உள்நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும் என்று காலங்காலமாக அரைக்கப்பட்டு வரும் மாவை புதிய இயந்திரத்தில் மோடி அரசு அரைக்கிறது. ஏற்கனவே இதேபோல பெப்சி, கோலா, ரிலையன்ஸ், டாடா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்க தாரை வார்க்கப்பட்ட இயற்கை வளங்களால் மண்ணின் மைந்தர்களின் கதி என்ன ஆனது என்பது குறித்த வரலாறு போபால், குஜராத், மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் என்று நம் கண் முன்னே நிழலாடுகிறது. இருந்த நிலம் பிடுங்கப்பட்டு அருந்த நீர் இல்லாமல் வாழ வைத்த விவசாயம் பொய்த்துப் போய் பிச்சைக்காரர்களாக மாறி, தற்கொலை செய்யும் இழி நிலைக்கு நம் மக்கள் தள்ளப்பட்டனர். அவாக்கள் கூறும் வேலை வாய்ப்பு, பெரு நிறுவனங்களில் துப்புரவு பணியாளராகவும் ,கழிவறை சுத்தம் செய்பவர்களாகவும், தோட்டத் தொழிலாளர்களாகவும் இருப்பதுதான் சரி அப்படியே பெரு முதலாளிகள் இந்தியாவில் தொழில் தொடங்கினால் அவர்கள் அடையும் இலாபம் மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யப்படுமா என்றால் அதுவும் கிடையாது. அவர்களைக் கட்டுப்படுத்தும் போதிய சட்ட வலிமை நம்மிடம் உள்ளதா என்றால் இல்லை என்பதற்கு போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் சோக சரித்திரமாக நின்று மௌனசாட்சி சொல்கிறது. எங்கிருந்தோ வரும் ஒருவன் இந்தியர்களின் முதுகில் சவாரி செய்து அவனது இருப்பைப்  பலப்படுத்திக் கொள்ள நம் ஆட்சியாளர்கள் செய்து கொடுக்கும் கள்ளக் கடிவாளமே இந்தமேக் ஆன் இந்தியாஇதன் மூலம் நம்மவர்களின் வங்கியிருப்பு பலமடையும் என்பது தெள்ளிடை நீர்.

7. கல்வியில் கரை சேருமா?

    எல்லாம் போகட்டும் கல்வியிலாவது கரை சேருமா காவி அரசு? என்று யோசித்தால் அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் பள்ளிகளில் 28,635 கோடி செலவில் கழிவறை, குடிநீர் வசதி செய்து தரப்படும் என்பதைத் தவிர உருப்படியான அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனால் கல்வியை காவிமயமாக்கல், சமஸ்கிருதம் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி திணிப்பு போன்ற தாய்ச் சபையின் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மும்முரம் காட்டத்தொடங்கி விட்டனர். காந்தி ஜெயந்தி விடுமுறை ரத்து என்று கூறினர். கிறிஸ்மஸ் தினத்தன்று பள்ளிகளில் கட்டுரைப் போட்டி நடத்த வேண்டுமென்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டனர். முக்கியமாக பிரதமரின் பேச்சை அனைவரும் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திய வரலாற்று சிற(ரி)ப்புமிக்க அவலமும் இங்குதான் நடந்ததுஇப்படி கையாலாகாத அறிவிப்புகளோடு கல்வித்துறை நின்று விட்டது. எல்லாவற்றிற்கும் மேல் பெரிய காமெடி வெளிநாட்டிற்கு போய் 15நாள் வகுப்பை முடித்த கையோடுநாங்களும் ஃபாரின்ல படிச்சு டிகிரி வாங்கிருக்கோம்லஎன்று மாண்புமிகு மனித வளத் துறை அமைச்சர் பீற்றிக் கொண்டதுதான். இவர்தான் தேசத்தின் கல்விக்கொள்கையை கடைக்கோடி வரை முன்னெடுத்துச் செல்லப் போகிற எச்சரிக்கை மக்களே!.

8. FDI எனும் பொன்சட்டி.
   
     முந்தைய அரசாங்கம் FDI அறிவித்த போதுநாட்டை வெளிநாட்டுக்காரனுக்கு விக்கிறாங்கஎன்று தரையில் படுத்துக் கொண்டு அழுது புலம்பியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் செய்த முக்கியமான வேலை அதே வெளிநாட்டுக் காரங்கள கூப்பிட்டு உனக்கு இவ்ளோ உனக்கு அவ்ளோ என்று பங்கு பிரித்ததுதான். எதிர்பாராத வகையில் நாட்டின் பாதுகாப்பையே ஃபாரின்காரனுக்கு பிரிச்ச கொடுத்தது மைல்கல்!. ரயில்வே, காப்பீட்டுத் துறை  எனஎதையும் விட்டுவைக்கவில்லை டீக்கடைக்காரரின் முதலாளித்துவ மோகம்.

9. அமைச்சர் - பரிவாரங்களின் ஆட்டம்

        நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு நல்லது தான் செய்ய முடியல அவங்கள நாசமாக்குற வேலையாவது செய்யாம இருக்கலாம்ல அதுவும் இல்லை. ஆட்சிக்கு வந்ததிலிருந்தது அடிபொடிகளின் ஆட்டம் அமர்க்களப்படுத்த ஆரம்பித்து விட்டது. “நான் கிறிஸ்துவ இந்துஎன்று கோவா முதல்வர் ஆரம்பிக்க முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் இந்துக்களே என்று முட்டாள்தனமாக தொகாடியா உளறி வைக்க, ராமருக்கு பிறந்தவர்களைத் தவிர அனைவரும் வழி தவறியவர்களே என்று மத்திய அமைச்சர் மடத்தனமாக பேச என் நண்பர் ஒருவர் கேட்டார். “ராமனுக்கு வேற வேலையே இல்லாம புள்ள மட்டும்தான் பெத்துக்கிட்டிருந்தாரானு?” சரி அதோடு நின்னாங்களா? ஆக்ராவில் 200 முஸ்லீம் குடும்பங்களை அக்னி குண்டம் முன் அமர வைத்து தாய் மதத்துக்கு திருப்புறேன்னு சொன்னாங்க அடுத்த வாரம் அவர்கள் எல்லாம் பள்ளிவாசலில் தொழுகை வரிசையில் அமர்ந்திருந்தனர் அதற்குள் வெங்கய்யா நாயுடு தாய் மதத்திற்கு திருப்புவது தடுக்கப்பட வேண்டுமெனில் மதமாற்ற தடை சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று எழுதி வைத்த காகிதத்தைப் படித்துஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஎன்று மனோகரா வசனத்திற்கு அதிபதியானார்.

இன்னும் இந்த ஆறுமாத  ஆட்சியில் பட்டியலிட எவ்வளவோ இருக்கிறது. படித்த மக்கள்இரட்சகன்” “வளர்ச்சியின் நாயகன்என்று தலைமேலே தூக்கிவைத்து கொண்டாடும் நரேந்திர மோடியின் இந்த ஆட்சி சிறிதும் கூட நல்லாட்சியாக இல்லை என்பதே நிதர்சனம் ஆகையால் படித்தவர்களுக்கு புரியும் வகையில் அறிவுத்தளத்தில் நின்று இந்த ஆட்சியின் குறைகளை மக்கள் மத்தியில் எடுத்து வைப்பது நடுநிலையாளர்கள் மீது கடமையாக உள்ளது. அப்படி செய்யும் போதுதான் நாடு நலம் பெற, நல்லவர் வாழ்ந்திட, நல்லாட்சி நமது அடுத்த தலைமுறைக்காவது வாய்க்கும்.

          
                                                                     R. அபுல் ஹசன்
                                                                                    9597739200



Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!