மூன்று மரணங்களும் மூன்று செய்திகளும்..!

மரணம் உலகப்பொது நியதி. பிறக்கும் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றோம். தினமும் பல இறப்பு செய்திகள் நம்மைக் கடந்து செல்கின்றன. நாமும் பல இறப்புகளை கடந்து வருகின்றோம். எல்லா மரணங்களும் நம் நினைவில் நிற்பதில்லை. சில மரணங்கள் நம்முள் சில சலனங்களை ஏற்படுத்தலாம். சில மரணங்களை நாமே கூட விரும்புவதுண்டு. பொதுவாக மரணங்களுக்கான எதிர்வினைகள் சில நாட்கள் மட்டுமே. அதற்கு பிறகு நம்முடைய இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் அல்லது திருப்பப்படுவோம்.

சில மரணங்கள் நம்மை கலங்க வைப்பதுடன் உறங்கவும் விடாமல் உலுக்கி எடுத்துவிடும். கண்கள் அருவியாக மாறிக் கண்ணீரை சுரந்த வண்ணம் இருக்கும். வெகு நாட்கள் நம் நினைவுகளையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆக்கிரமிக்கும். இன்றைய சூரியன் உதிக்காமல் இருந்திருக்கலாமோ என்று இயற்கையையும் மீறி நம்மை சிந்திக்க வைக்கும். அப்படிப்பட்ட மரணங்களால் சமுதாயத்தில் மாற்றங்கள் மலரும்; புரட்சிகள் வெடிக்கும்; புதிய கதவுகள் திறக்கும். கடந்த ஜூலை மாதம் அப்படிப்பட்ட மூன்று மரணங்களைக் கண்டுள்ளது. அந்த மூன்று மரணங்களும் மூன்று செய்திகளை, மாற்றத்திற்கான விதைகளை சமுதாயத்தில் விதைத்துச் சென்றுள்ளது. ஏன் நடந்தது என்று யோசிக்க வைத்துள்ளது. நீதியின் கதவுகள் எல்லோருக்கும் திறக்காது என்று உணர வைத்துள்ளது. தீர்வே வராதா என்று அனுதினமும் ஏங்கியவர்களின் கவலைகளை நீங்கச் செய்துள்ளது.

சன சமுத்திரமான இராமேஸ்வரம்:

பல முறை வதந்தியாக காற்றில் பயணித்து இந்த செய்தி காதுகளை அடைந்ததுண்டு. இந்த முறையும் வதந்தியாகவே இருக்கும் என்று ஆறுதல் அடைந்த சில மணித்துளிகளுக்குள் செய்திகளை முந்தித் தரும் ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பி ஆறுதலைக் கூறு போட்டன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்கள் உயிரிழந்தார் என்ற அந்த செய்தி சற்றேறக்குறைய உலகின் எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானது. இந்தியாவின் முதல் குடிமகன் முதல் கன்னியாகுமரியின் கடைக்கோடி மனிதன் வரை இன்றைய தினம் ஏன் சூரியன் உதித்தது என்று சிந்திக்கத் தலைப்பட்டனர். கண்ணீர் அஞ்சலி பதாகைகளுக்காகவும், சுவரொட்டிகளுக்காகவும் அச்சகங்கள் மூன்று நாட்கள் இடைவிடாமல் இயங்கின. எல்லா சாலைகளும், சுவர்களும் அவருடைய ஏதோ ஒரு புகைப்படத்தை தாங்கி அதற்கு கீழே அவர் உதிர்த்த வார்த்தைகளையும் கொண்டிருந்தது. சாதி, மத, மொழி, இன பாகுபாடின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் அந்த மாமனிதனுடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தியது. "எங்களைக் கனவு காணச் சொன்னாயே இந்த நாள் கனவாக இருக்க கூடாதா” என்று தங்கள் ஆற்றாமையினை வெளிப்படுத்தினர்.

பாவங்களை கரைப்பதற்காக மக்கள் ராமேஸ்வரம் வருவதுண்டு. ஆனால் முதன் முறையாக ஒரு புண்ணியத்தை புதைக்க அந்த மண்ணை மிதித்தனர் இலட்சக்கணக்கான மக்கள். அவரது மரணம் அவர் மீது இந்த தேசம் வைத்திருந்த அன்பை, மரியாதையை, அளப்பரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது. இளைஞர்களுக்கு அவர்தம் இலட்சியம் மீதான வேட்கையினை அதிகரிக்கச் செய்துள்ளது. அவர் விட்டுச் சென்றுள்ள வல்லரசு இந்தியாவின் மீதான அவரது கனவை நனவாக்க எமது இளைஞர்கள் அவர் புதைக்கப்பட்ட நாள் முதல் இன்னும் தீவிரமாக களமாற்ற சூளுரைத்துள்ளனர். எந்த ஓரு மனிதனின் மரணத்திற்கு ஒட்டுமொத்த தேசமும் அழுகிறதோ அவனே உண்மையான தலைவனாக இருக்க முடியும். அந்த வகையில் அப்துல் கலாம் அவர்கள் ஒரு மிகச் சிறந்த தலைவராக இன்று நாட்டு மக்களால் போற்றப்படுகிறார். இனியும் போற்றப்படுவார்.

சசிபெருமாள் எனும் சகாப்தம்:

இன்று தமிழகம் புரட்சி பூமியாக மாறியுள்ளது. மது அரக்கனுக்கு எதிரான போராட்டங்கள் பூதாகரமாகியுள்ளன. போராட்டமாக இருந்தது அரசின் அடக்குமுறையால் மாணவர் புரட்சியாக பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. பச்சிளம் பாலகன் முதல் வளர்இளம் பாவைகள் வரை பலரையும் தன் ஆக்டோபஸ் கரங்களுக்குள் ஆட்கொண்டு மெல்ல தமிழகத்தை சுடுகாடாக்கிய கொடிய மதுவிற்கு அழிவு காலமே இல்லையா என்ற கவலையினை ஒரு மரணம் போக்கியுள்ளது என்பதுதான் நிதர்சனம். தன் இளவயது முதல் மதுவிற்கு எதிராகப் போராடி கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்த காந்தியவாதி ஐயா சசிபெருமாள் அவர்கள் அந்தப் போராட்டத்திற்கே தன் உயிரையும் விலையாக கொடுத்துள்ளார்கள்.

கதவுகளை மூடிக் கொண்டு காணொளியிலும், எட்ட முடியா உயரங்களிலும் அமர்ந்துள்ள ஆட்சியாளர்களின் செவிகளுக்கு தன் குரலை எட்டச் செய்ய எந்த உயரத்திற்கும் செல்வேன் என்று சென்றவர் உயிருடன் திரும்பவில்லை. ஒரு சமூக அவலத்திற்கெதிராக போராடி அந்தப் போராட்டத்திலேயே உயிர் நீக்கும் அரிய வாய்ப்பு அனைவருக்கும் அமையாது.

அப்துல் கலாம் தன் வாழ்வின் இறுதி நிமிடங்களையும் தனக்கு விருப்பமான மாணவர்களுக்கு மத்தியில் செலவழித்துள்ளார். ஐயா சசிபெருமாள் அவர்கள் தனது போராட்ட களத்திலேயே தனது வாழ்வின் இறுதிப் பகுதியை கழித்துள்ளார். ஒருவருடைய வாழ்வும் மரணமும் பிறருக்குப் பாடமாக அமையும்போது அது சரித்திரமாகிறது. அந்த வகையில் கலாம் மட்டுமல்ல, சசிபெருமாளும் சரித்திரமே..! சசிபெருமாளின் மரணம் வீசும் காற்று செல்லும் திசையெங்கும் மது ஒழிப்பிற்கான முழக்கத்தை தாங்கிச் செல்லட்டும்! நம் எதிர்கால சந்ததி மது இல்லா தேசம் காணட்டும்! மது வருமானத்தைக் கொண்டு அரியணையை தக்கவைக்க நினைக்கும் ஆட்சியாளர்கள் மக்கள் முன் மண்டியிடட்டும்! அதுதான் அவரது உயிருக்கு நாம் கொடுக்கும் விலையாக இருக்கும்.

விவாத மேடைகளுக்கு வித்திட்ட தூக்கு மேடை:

"இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் சமூக - பொருளாதாரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனைக் களையாதவரை மரண தண்டனையில் மதிப்பில்லை..! ஆகையால் நான் மரண தண்டனைக்கு எதிரானவன்..!"

மரண தண்டனையினை தன் வாழ்வின் இறுதி மூச்சு வரை எதிர்த்த மேதகு கலாம் அவர்கள் தன் கைப்பட எழுதிய வாசகங்கள் தான் மேலே உள்ளவை. ஆனால் அந்த மாமனிதனை புதைக்கும் முன்பே அவரது கனவை மண்ணில் புதைத்தது இந்தியாவின் கூட்டு மனசாட்சி. தனது சகோதரனின் குற்றத்தைக் கண்டு மனம் பொறுக்காமல் திறந்த வெளிச் சிறையில் காலம் தள்ள விரும்பாமல் இந்திய புலனாய்வுத் துறையே திணறிய ஒரு வழக்கின் முக்கிய தகவல்களுடன் சரணடைந்த ஒருவரை எப்படி நடத்தக் கூடாதோ அப்படி நடத்தி தனது கடமையினை செவ்வனே நிறைவேற்றியுள்ளது இந்திய நீதித் துறை. டைகர் மேமனின் சகோதரன் என்பதைத் தவிர வேறு எந்த குற்றத்தையும் நான் செய்யவில்லை என்று உணர்ச்சி பொங்கக் கூறிய யாகூப் மேமனின் வார்த்தைகளைக் கேட்காமல் கண்களுடன் காதுகளையும் கருப்புத் துணியால் மூடிக் கொண்டாள் நீதி தேவதை. இருபது வருட காலம் சிறையில் நல்ல மனிதனாக, சக கைதிகளுக்கு உதவுபவராக, கல்வியாளராகத் திகழ்ந்த ஒருவரை சாகடித்து தன் இரத்தவெறியை தணித்துக் கொண்டது காவிக் காட்டேறி.

மும்பை குண்டுவெடிப்பு குற்றத்திற்காக யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டுள்ளார். ஆனால் அந்த மும்பை குண்டு வெடிப்பிற்கு காரணமாக அமைந்த மும்பை கலவரத்திலும் கலவரத்திற்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பிலும் மூளையாக செயல்பட்ட நபர்கள் இன்று அமைச்சர்களாகவும், எம்பிக்களாகவும் இருக்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணா கமிஷனால் குற்றவாளி என்று கை நீட்டப்பட்ட பால் தாக்கரேயின் மறைவிற்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மேமன் கொல்லப்பட்ட அதே நாளில் குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்திய மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் கூட்டு மனசாட்சி முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் விழித்துக் கொள்வது வேடிக்கையான வாடிக்கையாகிவிட்டது.

மும்பை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாகூப் மேமனை தூக்கில் போட்டதன் மூலம் நியாயம் வழங்கிய அரசு மும்பை கலவரத்திலும், குஜராத் கலவரத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க தனது அமைச்சர்களை தூக்கில் போடத் தயாரா? பால் தாக்கரேவின் பிணத்தைத் தோண்டியெடுத்து தண்டனை வழங்குவார்களா? நீதி இந்த தேசத்தில் கூறு போடப்படுவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டும் விரைந்து நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனைகள் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது.

பேய்களின் ஆட்சியில் பிணம் திண்ணும் சாத்திரங்கள்..!

- அபுல் ஹசன்


தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
பிரிவு: கட்டுரைகள்
 

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!