சென்று வா..!


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..!

இனியொரு முறை உனைப் பார்ப்பேனா தெரியவில்லை
தனியறையிலும் உன் நினைவென்னை பிரியவில்லை..

குடல் பசித்தது ஆனால் புசிக்க மனமில்லை
தாகம் தகித்தது தண்ணீர் குடிக்க மனமில்லை
கண்கள் கிறங்கியது உள்ளம் உறங்கவில்லை..
கச்சை கட்டிக் கொண்டு இச்சை தவிர்த்தேன்

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..

உன்னால் உடலில் பரவும் உஷ்ணமும்
டிசம்பர் கால குளிராய் மாறியது..

உன்னோடு நடக்கையில் எட்டு வைக்கும் ஒவ்வொரு அடியும்
நீ எனை விட்டுப் பிரிவாயோ எனும் அச்சம்
மற்றெல்லா வற்றையும் ஆக்கியது துச்சம்..

காலை முதல் மாலை வரை உன்னுடன் இருந்தேன்
மாலை வந்தால் மீண்டும் நீ வரும் நேரம் பார்த்திருந்தேன்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..

உன் விரல் கோர்த்து நடந்துவிட்டேன்
மகிழ்ச்சியுடன் கடந்துவிட்டேன்
விரலிடைகள் பிரிக்கினறாய்
பிரிவிடைகள் கொடுக்கின்றாய்
தொடும்பொழுது மறைகின்றாய்
தொலைதூரம் செல்கின்றாய்..

நீ இல்லாத என் நாட்கள்
காற்றில்லாத இரவு..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..

இனியொரு முறை உனைப் பார்ப்பேனா தெரியவில்லை..
நீ விட்டுச்சென்ற சுவடுகளைத் தொட்டுத் தொடர முயற்சிக்கிறேன்..
உன் நினைவுடன் வாழ என்னை நான் பயிற்சிக்கிறேன்..
சென்று வா ரமலானே..!
இனறு உன் நினைவுகளை நான் சுமப்பது போல
நீயும் சுமந்து நாளை என் அதிபதியிடம் எனக்காக பரிந்து பேசு..

உன்னால் ரையான் வாசல் வழியாக எனை சுவனத்திற்கு இட்டுச் செல்..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறவாது கண்மணியே..!
அபுல் ஹசன் R

Comments

Popular posts from this blog

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!