ஊர்கூடி உடைப்போம்..!

ஊர்கூடி உடைப்போம்..!
(இந்த கட்டுரை 23-05-2017 தினமணி நாளிதழில் நடுப்பக்க கட்டுரையாக பிரசுரமாகியுள்ளது.  படிக்க கட்டுரையின் முடிவில் சுட்டி உள்ளது)


12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவுகள் வந்தாகிவிட்ட்து.. ஒரு வருடம்..இல்லை.. இரண்டு வருடங்கள்(11ம் வகுப்பிலேயே ஆரம்பித்து) பள்ளியில், தனிப் பயிற்சி வகுப்புகளில், கொஞ்சூண்டு வீட்டில் என்று மூச்சுத் திணற திணற படித்தவற்றை (புரிந்தவற்றை அல்ல!) நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட தேர்வறைத் தீவுகளில் கொட்டிவிட்டு மாணவர்கள் அடைந்திருந்த சிறிது நிம்மதியையும் இந்த முடிவுகள் காவு வாங்கியிருக்கும். அத்தோடு பெற்றோர்கள் தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பதில் நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்து தவித்துக் கொண்டிருப்பதையும் கண்கூடாகக் காணலாம்.  அவர்களது நிம்மதியை குலைப்பதற்கென்றே இந்த நேரத்திற்கெல்லாம் தனியார் கல்வி வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறந்து வைத்து கூவிக் கொண்டிருப்பர்.

ஒவ்வொரு வியாபாரத்திற்கும் ஒரு பருவம் இருப்பது போல் நமது கல்விக் கடைகளில் வியாபாரம் ஜோராக நடப்பது மே-ஜூன் மாதங்களில். தனியார் பள்ளி, கல்லூரிகளில் LKG தொடங்கி MBBS வரை சேர்க்கை எவ்வாறு நடைபெறுகிறது? கல்விக் கட்டணம் எவ்வளவு? வளர்ச்சி நிதி என்கிற பெயரில் பிடுங்கப்படுவது எவ்வளவு? அந்தப் பள்ளி, கல்லூரிகளில் எத்தகைய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? பாடம் நடத்தும் ஆசிரியர்களின் கல்வி, அறிவுத் தரம் என்ன? விடுதிகளில் சுகாதார சூழல், உணவு ஆகியவை எவ்வாறு உள்ளன? படிப்பில் சேர்ந்த எத்தனை பேர் படிப்பை முடித்தனர்? முடித்த எத்தனை பேர் தகுதியான வேலையில் சேர்ந்துள்ளனர்? எத்தனை மாணவர்கள் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் செயல்படுகின்றனர்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் வேலையை இதனைப் படிக்கும் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடித்தவுடன் பெற்றோர்களும் மாணவர்களும் செய்யும் முதல் வேலை எந்த பொறியியல் கல்லூரியில் எவ்வளவு பணம் கட்டினால் இடம் கிடைக்கும்? படிப்பு முடித்தவுடன் பன்னாட்டுக் கம்பெனியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்குமா? என்று சல்லடை போட்டு சலித்து எடுப்பதுதான். சற்று பணம் படைத்தவர்களாக இருந்தால் எவ்வளவு கொட்டிக் கொடுத்தேனும் மருத்துவக் கல்லூரியில்  இடம் கிடைக்க பகீரதப் பிரயத்தனம் செய்வர்.
என்னுடன் பணி புரியும் ஒருவர் சொல்லிய தகவல் எனக்கு அதிர்ச்சியுடன் ஆச்சரியத்தையும் அளித்தது. அவர் சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 5 இலட்ச ரூபாய் நன்கொடை கட்டி சேர்ந்ததுடன் வருடம் ஒரு இலட்ச ரூபாய் கட்டணம் செலுத்தி படித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பொறியியல் கல்லூரிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.

பொறியியல் படிப்பு மீதான மோகத்தை இன்னோரு புள்ளி விவரம் மூலம் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். 2012-2013இல் 20 இலட்சம் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதில் 16% பேர் அதாவது கிட்டத்தட்ட 3.5 இலட்சம் பேர் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
சரி படித்து முடித்து வேலை கிடைக்கின்றதா? என்று பார்த்தால் அதுவும் கிடையாது. இந்தியாவில் கல்லூரி முடித்து வெளியே வருபவர்களில் 60% பேர் வேலை பெற தகுதியற்றவர்களாக வெளிவருகின்றனர் என்று போட்டு உடைக்கின்றது ஓர் ஆய்வறிக்கை.

எனக்கு தெரிந்த ஒருவர் 2010இல் பொறியியல் முடித்துவிட்டு முன்று வருடங்கள் ஓர் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார். பொறியியல் படிப்பு எங்கே? விற்பனையாளர் வேலை எங்கே?

 IIT, IIM போன்ற அரசு நிறுவனங்கள், பெரிய பண முதலைகளின் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த சில ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கப் பெறுகின்றனர். ஆனாலும் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனங்கள் இலட்சங்களைக் கொட்டி அவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கின்றனர். இதுதான் இன்றைய நமது பொறியியல் கல்வியின் நிலை.
அப்படியானால் இன்னும் ஏன் பாமர மக்கள் பொறியியலின் பின்னால் அலைகின்றனர்? ”ஆப் கி பார் மோடி சர்க்கார்” போல்தான் நமது பொறியியல் கல்வியும். அது எப்படி மாயையோ, இதுவும் அப்படிப்பட்ட ஒரு மாயையே. அதனை எப்படி விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதில் ஒட்ட வைத்தார்களோ அப்படியேதான் இதனையும் ஒட்ட வைத்துள்ளனர். முன்னதிலும் பண முதலைகளின் ஆதிக்கம். இதிலும் அதேதான்.

நாம் விரும்பிப் படிக்கும் தினசரிகளில் திடீரென்று முழுப்பக்க விளம்பரம் வரும். “X பத்திரிகை - XX பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி-வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி”. அதனை டீக்கடைகளிலும், சலூன் கடைகளிலும் படிக்கும் நமது அப்பாக்கள், மளிகைக் கடைகளிலும், மார்க்கெட்டிலும் கேட்கும்  நமது அம்மாக்கள் பிள்ளைகள் மேல் உள்ள பாசத்திலும், கை நிறைய சம்பாதித்தால் நம்மை உட்கார வைத்து சாப்பாடு போடுவார்களே என்ற இம்மியளவு சுயநலத்துடனும் அங்கு அழைத்துச் செல்வார்கள். முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கிற்குள் நுழைந்தவுடன் எங்கு திரும்பினும் பொறியியல் கல்லூரிகளின் விளம்பரப் பலகைகள் வித விதமாக நம்மைப் பார்த்து பல்லை இழிக்கும். காசு வாங்கிக் கொண்டு பேச வந்திருக்கும் கோர்ட்டு போட்ட கனவான்கள் பொறியியல் கல்வி மட்டும்தான் உன்னை உயர்ந்தவனாக்கும் என்கிற ரீதியில் வாங்கிய காசுக்கு வார்த்தைகளை அளந்து விடுவர். அதைக் கேட்டு நம்மவர்கள் வாயைப் பிளந்து விடுவர். அந்த நாளிதழ் நுழைவுக் கட்டணம், பொறியியல் கல்லூரியின் விளம்பரங்கள், கடலை மிட்டாய் கடைகள் என்று வலுவாக கல்லா கட்டியிருக்கும். நம் வீட்டிலோ அப்பாவின் விவசாய நிலம், அம்மாவின் தாலி என்று ஏதாவது அடகுக் கடை, வங்கியின் வாசலை எட்டியிருக்கும்.

இது ஒரே ஒரு உதாரணம்தான். இப்படி கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமே பொறியியல் மீதான ஆர்வம், மோகமாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மூன்று இலட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகின்றனர். அனைவருக்கும் வேலை கிடைப்பது நடைமுறைச் சாத்தியமா? அறிவைக் கொண்டு சிந்தித்தால் பொறியியல் குறித்த மாயை விலகும். ஒரு காலம் இருந்தது. பொறியியல் முடித்தவுடன் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அது பொறியியல் யுகத்தின் துவக்கம். ஆனால் இன்று அதனைத் தாண்டி பல்வேறு புதிய துறைகள் ஒளிவீசுகின்றன. அறிவோடு பணத்தையும் சேர்த்தே தரக்கூடிய பல்வேறு புதிய படிப்புகள் கல்விச் சந்தையில் உலா வருகின்றன.
குறிப்பாக மானுடவியல் சார்ந்த துறைகள், கலை, அடிப்படை அறிவியல் சார்ந்த துறைகள், வழக்குரைஞர் கல்வி, வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் படிப்புகள் போன்ற எண்ணற்ற துறைகள் உலக நாடுகள் பலவற்றிலும் சிறந்த மாணவர்களை ஆண்டுதோறும் உருவாக்குகின்றன. இன்னும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அதிகரிக்க இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தத் துறைகளில் சேருவதற்கு வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் படையெடுக்கின்றனர். மண்ணியல், புவியியல், தொல்லியல், தத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளில் மாணவர் சேர்க்கை அபூர்வமாகி வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் இத்தகைய துறைகளை குழி தோண்டி புதைத்தாகிவிட்டது. ஆனால் இத்துறைகள் நமது வாழ்வு முடியும் வரையிலும் வாழ்விற்குப் பின்னும் நமக்கும், நாம் சார்ந்த சமூகத்திற்கும் பலனளிக்கக் கூடியவை.
ஆதலால் மாணவர்கள் கவர்ச்சிக்கு விலை போகாமல், அறிவைக் கொண்டு சிந்தித்து தமது விருப்பத்திற்கேற்ற துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் துறை நம் வாழ்வுடன் சமூகத்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் வண்ணம் இருக்க வேண்டும். பெற்றோர்களும் “நாந்தான் இன்ஞினியர் ஆகல..எம்புள்ளயாவது ஆகட்டும்” போன்ற மனநிலையை விட்டொழிந்து தம் விருப்பத்தை திணிக்காமல் பிள்ளைகளின் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். கல்வி நிறுவனங்களும், அரசுகளும், ஊடகங்களும் பொறியியல் பல்லவியையே பாடாமல் ஆக்கப்பூர்வமான மாற்று கல்வித்துறைகளை முன்னெடுக்க வேண்டும். அவற்றை பிரபல்யப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஊர்கூடி தேர் இழுத்தால் மட்டுமே இந்த ராட்சச பொறியியல் பலூனை உடைக்க முடியும்.

தினமணியில் படிக்க :

http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/may/23/சிந்தித்து-செயல்படுவோம்-2706987--1.html

By
அபுல் ஹசன் R
9597739200

Comments

Popular posts from this blog

சென்று வா..!

இந்திய கல்வித் துறையின் முன்னோடி ..!

முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!